/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/b51_4.jpg)
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் விஜய் நாராயணன், சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜராகினர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவைக் கூட்டவில்லை எனத் தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராகத் தனி நீதிபதி உத்தரவு உள்ளது. தனி ஒரு நபர் பயனடையும் வகையில்தான் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வால் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது என வாதிட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். இது தொடர்பாக விதியைக் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார்" என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், நாளை எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)