Skip to main content

ஓ.பி.எஸ்க்காக காத்திருக்கும் இ.பி.எஸ்; ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு திருப்பம் ஏற்படுமா?

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

EPS waiting for OPS; Will there be a turnaround for AIADMK in Erode East?

 

ஓ.பி.எஸ் தரப்பில் இன்று காலை 10 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

 

அதிமுக இ.பி.எஸ் தரப்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க பரப்புரையை மேற்கொள்வேன் என ஓ.பி.எஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என இரு தரப்பிலிருந்தும் பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் ஓ.பி.எஸ் தரப்பு அனுப்பிய பேச்சாளர்கள் பட்டியல் ஏற்கப்படவில்லை. 

 

செய்தியாளர் சந்திப்பில், இது குறித்துப் பேசிய ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ், “பிரச்சாரம் என்பது ஈரோட்டிற்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. காணொளி வாயிலாகவும் மேற்கொள்ளலாம்” எனக் கூறி இருந்தார். தொடர்ந்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் இ.பி.எஸ் தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பாஜக - அதிமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். இந்நிகழ்வில் ஓ.பி.எஸ் தரப்புக்கு அழைப்பு விடப்படவில்லை. 

 

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில் சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில், இன்று (20-02-2023 திங்கட்கிழமை) காலை 10-00 மணிக்கு நடைபெறும் என ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டம்  இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பிரச்சாரத்தில் தன் பங்கு என்ன என்பது குறித்தும் தமிழக பாஜகவின் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

 

மேலும், பிப்ரவரி 24 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருவதால் தங்கள் தரப்பு நிகழ்ச்சிகளையும் ஆலோசிக்க இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படலாம் என முன்பு கூறப்பட்டது. ஆனால் பிப்ரவரி 17 ஆம் தேதியே, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாளான 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10-00 மணியளவில் சென்னை, காமராஜர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்படும்” என ஓ.பி.எஸ் அறிக்கை வாயிலாக தெரிவித்த நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தான ஆலோசனையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் குறித்தான அழைப்பு கடிதத்தை ஈ.பி.எஸ் தரப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லாத நிலையில் இரட்டை இலை சின்னத்திற்காக தனது பங்களிப்பை ஓ.பி.எஸ் எப்படி அளிக்கப்போகிறார் என்ற கேள்வி மேலெழுந்துள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்று அறிய இ.பி.எஸ் தரப்பினர் காத்திருப்பர் என்றே சொல்லலாம். 

 

 

 

சார்ந்த செய்திகள்