ADVERTISEMENT

சொன்னதை செய்வாரா எடப்பாடி... சந்தேகத்தை ஏற்படுத்திய அதிமுக... மத்திய அமைச்சரை சந்தித்த பின்னணி!

05:05 PM Feb 13, 2020 | Anonymous (not verified)

நெடுவாசல் உள்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நெடுவாசலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, 196 நாட்கள் தொடர் போராட்டமும் நடந்தது. மத்திய-மாநில அரசுகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, திட்டம் வராது என்று சொல்வதும், அடுத்த சில நாட்களில் மற்றொரு அறிவிப்பை வெளியிடுவதுமாக இருந்தன.

ADVERTISEMENT



2018-ஆம் ஆண்டில் தமிழக அமைச்சர் கருப்பணன், டெல்லிக்குப் போய் "திட்டத்தை செயல்படுத்தலாம்' என்று கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். கடந்த மாதம், "சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்கள் கருத்தும் தேவையில்லை'’என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்தார்.

டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் கிராம சபையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் 9-ஆம் தேதி சேலத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பேசியபோது, "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று அறிவித்தார்.

ADVERTISEMENT



இதனால், நெடுவாசலில் போராட்டம் நடந்த நாடியம்மன் கோவில் திடலில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். போராட்டக்குழுவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தெட்சிணாமூர்த்தி நம்மிடம் பேசியபோது, "முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவிப்போடு நின்றுவிடாமல் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் முழுமை பெறும்''’என்றார்.


"ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்' என்று வலியுறுத்தி வந்த கைஃபா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன், "இந்த அறிவிப்பு குறித்து, கிராம சபை தீர்மானத்திற்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்கிறார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் இதுகுறித்து நாம் பேசிய போது, காவிரி டெல்டா மாவட் டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.

எடப்பாடியின் அறிவிப்பை கடிதமாக, அ.தி.மு.க. ராஜ்யசபா டீம் உடன் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். வேளாண் மண்டலம் என அறிவித்த அதே எடப்பாடி, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் 50 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் போட்டிருப்பதும், விவசாயியின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் 8 வழிச் சாலையில் முனைப்பு காட்டுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT