Skip to main content

“யார் அந்த சார்? என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது” - இ.பி.எஸ். கருத்து!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

EPS says The question of who is that sir Still remains

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர்.

இவ்வாறு இருதரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று (28.05.2025) இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது ” என நீதிபதி தீர்ப்பை வாசித்தார். மேலும்,“தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?. ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?. சிறப்பு புலாணாய்வு குழுவில் (SIT) பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்?. உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?. இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார்? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது.

EPS says The question of who is that sir Still remains

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?. பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும், காட்சிகள் மாறும், விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த சார் யாராக இருந்தாலும் கூண்டேற்றட்டப்படுவார். சார்களை காக்கும் சார்களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்