Skip to main content

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும்” - இ.பி.எஸ்

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
EPS says Incident happened against women must be prevented

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது. காவல் துறை விசாரணையில், இந்தk கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் குற்றச் செயல்களையும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள். 

இந்தத் தி.மு.க ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் மேற்கண்ட நிகழ்வு. இந்தத் தி.மு.க ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் பேசுகின்றபோது, தேர்தல் ஆதாயத்திற்காக இல்லாமல், ஒரு குடும்பத் தலைவனாக நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பிலேயே பேசினேன்.

தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குழப்பத்தில் எடப்பாடி; பதிலடி தந்த மா.சு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

 Confused Edappadi - Answer replied Ma.su

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட்டானவர்களுக்கு உயரிய அவசர சிகிச்சை அளித்தது திமுக அரசின் மருத்துவத்துறை. அட்மிட்டானவர்களை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார். மருத்துவர்களுக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று சொல்ல, உடனே, "4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக பதிலடி தந்தார் அமைச்சர் மா.சு. 

இந்த நிலையில்,  Fomepizole  மருந்து இல்லை என்று பேசிய எடப்பாடிக்கு மீண்டும் பதிலடி தரும் வகையில் தந்திருக்கிறார்  அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

இது குறித்து அவர்  பேசியபோது, "  இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி. Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol)  மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.    மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது  புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால்,  அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின்,  எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும் " என்று செம காட்டமாக  பதிலடி தந்துள்ளார் அமைச்சர் மா.சு. அமைச்சரின் பதிலடி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.