EPS says Finance Minister talk is funny

திமுக ஆட்சி அமைத்த பிறகு தான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக அரசு சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான ‘மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்பது போல டெல்லி பக்கம் கையை நீட்டி தப்பிக்க முயல்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

Advertisment

ஏதோ திமுக ஆட்சி அமைத்த பிறகு தான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவது இல்லை என்பதை நான் எப்போதும் சொல்லிவரும் கருத்து தான். மத்திய அரசின் நிதியைப் பெற்றும் சரி; மத்திய அரசிடம் இருந்து நிதி வராதபோதிலும் சரி - மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டதில்லை.

Advertisment

அப்படியொரு நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று எதற்கெடுத்தாலும் டெல்லியைக் கைகாட்டும் ஆட்சி நடத்தவில்லை. கலைஞரின் நாணய வெளியீட்டிற்கு மத்திய பா.ஜ.க. அமைச்சரை அழைத்து வரத் தெரிந்த உங்களுக்கு, 39 எம்.பி.க்கள் இருந்தும், உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கான நிதியைப் பெறாதது ஏன்?. உங்களுக்கு மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகின்ற நிர்வாகத் திறன் இல்லையென்றால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சியில் இருந்த போது நிதிகளை முறையாகப் பெற்று நிறைவான ஆட்சி செய்தோம் என்பதை நினைவில் கொள்க” எனத் தெரிவித்துள்ளார்.