Skip to main content

“இபிஎஸ் பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” - ஓ.பி.எஸ்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

EPS has betrayed BJP says OPS

 

எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப்  பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். பாஜக மாநிலத் தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சலுகை விலை பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Extension of time to get preferential price bus travel card

சென்னையில் பயிலும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சலுகை விலையில் பேருந்து பயண அட்டை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விநியோகித்து வருகின்றது. இந்த பேருந்து பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னை மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்களில் வழங்கப்படும். இதில் மாணவர்கள் 50 சதவிகித சலுகை கட்டணத்தில் பயண அட்டையைப் பெற்று பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

அதே சமயம் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக மாணவர்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து பயண அட்டைகள் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சலுகை பயணச்சீட்டு அட்டையைப் பெற, கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Next Story

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.