EPS as General Secretary. Inauguration

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதில், வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும், மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு, மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், 18ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த இ.பி.எஸ். 11.05 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல்கள் எழுந்து வந்த நிலையில், இ.பி.எஸ். சார்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள், அப்படி யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் இ.பி.எஸ். ஒருமனதாக அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்ததும், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அந்த வழக்குடன் சேர்த்து பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான இரண்டு மனுக்களையும்தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து உடனடியாக ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது.

Advertisment

அதனைவிடத்துரிதமாகச் செயல்பட்ட இ.பி.எஸ். தீர்ப்பு வந்ததும் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இ.பி.எஸ்.-ஐ பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

ஓ.பி.எஸ். மேல்முறையீடு தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படஇருக்கும் நிலையில், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து மீண்டும் இடைக்காலத்தடை வாங்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இ.பி.எஸ். தீர்ப்பு வந்ததும் பொதுச்செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டதால், நாளை நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம் அனைவராலும் கவனிக்கப்படும்.