EPS Emphasis Vacancies in Health Sector to be filled 

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்படத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளைப் போர்க்கால அடிப்படையில் சீர் செய்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவு நீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வந்துள்ளன. மருத்துவமனைக்குள் இருதயப் பிரிவு, நரம்பு மண்டலப் பிரிவு போன்ற முக்கிய துறைகளுக்கு அருகே கழிவு நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, கழிவறைக்கு உள்ளே சென்று தண்ணீர் ஊற்றினால் அது வெளியில்தான் வருகிறது என்றும், அந்தக் கழிவு நீரை மிதித்துக்கொண்டே மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குச் செல்கிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisment

EPS Emphasis Vacancies in Health Sector to be filled 

இதனால், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களும் அந்தக் கழிவு நீரை மிதித்துக்கொண்டே மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். இது தவிர, இம்மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் துர்நாற்றம் வீசுகிறது என்றும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவில்லை என்றும், இதன் காரணமாகப் பல இடங்களில் நோயாளிகள் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ளன என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை உட்பட காலியாக உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில், மருத்துவக்கல்லூரிகளைத் திறப்பது ஏன் என்று திமுக அரசுக்குச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

ஏற்கெனவே, நான் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டு உடனடியாக ஏற்கெனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பவும், அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை குறித்தும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டிருந்தேன். இனியாவது, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்படத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளைப் போர்க்கால அடிப்படையில் சீர் செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment