ADVERTISEMENT

கோடநாடு வழக்கு; தி.மு.க.வினருக்கும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தம்? - சந்தேகிக்கும் இ.பி.எஸ்.

12:38 PM Aug 31, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி அம்மன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு நேற்று வந்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க மாநாடு வெற்றி பெற்றதற்கு சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர், மூலவர், சுந்தரேஸ்வரர், முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

அதன் பின்னர், சென்னை வருவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதுரையில் நடந்த அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை அதிமுக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

அப்போது அவரிடம், கோடநாடு கொலை வழக்கு குறித்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கோடநாடு கொலை வழக்கு குறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைதியாக இருந்தார். அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததை மட்டும் குறிப்பிட்டு பேசி வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு குறித்து சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியுள்ளேன். மேலும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அ.தி.மு.க ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த குற்றவாளிகளை காப்பாற்ற திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட தயாராக இருந்தார்கள்.

குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்ததும் தி.மு.க.வினர் தான். அதனால் தான் தி.மு.க மீது எனக்கு அதிக சந்தேகம் எழுகிறது. கோடநாடு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய ஜாமீன்தாரர்களான தி.மு.க.வினருக்கும் என்ன சம்மந்தம்? இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கொடும் குற்றங்களை செய்தவர்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்னமும் கேரளா நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களுக்கு ஏன் ஜாமீன் வழங்க திமுக தயாராக இருந்தது.

கொரானா பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்ததால் சிறிய காலதாமதம் ஆனது. ஆனால், அப்போது இந்த வழக்கு 90 சதவீதம் முடிவடைந்தது. அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சிக்கு பிறகு, இந்த வழக்கை ஐ.ஜி தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்மந்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். வெறும் 10 சதவீதம் மீதம் உள்ள இந்த வழக்கை முடிப்பதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது. எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாத காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அடிக்கடி வெளியிடும் குற்றச்சாட்டுகளை கண்டும் நாங்கள் எப்போதும் பதறவில்லை. குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்களை விசாரித்தால் தான் உண்மை என்னவென்று வெளிவரும். அதனால், கோடநாடு வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT