Advertisment

“கோரிக்கை மனுக்களை பெற்று மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்” - இ.பி.எஸ். விமர்சனம்

EPS Criticism All that’s left is to deceive the people by receiving petitions

“திராவிட மாடல் என்ற பெயரால் எந்தவித கொள்கையும் இல்லாமல், கொள்ளையடிப்பதை ஒரு கலையாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆட்சியாளர்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட் மூலம் தமிழகத்தை தொடர்ந்து ஆண்டுவிடலாம் என்ற நினைப்பில், எப்படியெல்லாம் மக்களை வஞ்சிக்கிறார்கள்” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளாது.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை. எங்களின் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை சென்னைக்குக் கொண்டுவந்து முதலமைச்சரின் தனிப் பிரிவில் அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.

Advertisment

1991-96 ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவை கணினிமயமாக்கியதுடன், ஜெயலலிதாவே நேரில் ஆய்வு செய்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தனி அலுவலராக நியமித்து, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைய நடவடிக்கை மேற்கொண்டார்கள். ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு 'அம்மா திட்டம்' என்ற ஒன்றை அறிவித்தார்கள். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அதிகாரிகள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் ஊராட்சிகளுக்குச் சென்று முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் போன்ற விண்ணப்பங்கள் முதலானவை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன.

தொடர்ந்து, 2019-ல் முதலமைச்சராக இருந்தபோது, 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்' மூலம் நானும், அமைச்சர் பெருமக்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, சுமார் 5,08,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் ஸ்டாலின்.

இன்று வரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன? அந்தக் கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளி விவரங்களை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை. அந்தப் பெட்டிகளின் சாவிகளை ஸ்டாலின் தொலைத்துவிட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து என்னை முதலமைச்சர் அறையிலேயே சந்திக்கலாம் என்று பசப்பு வார்த்தை பேசினார்.

இதுவரை ஒருவர்கூட ஒப்புகைச் சீட்டோடு சென்னைக்கு வந்து திமுக அரசின் முதலமைச்சரை சந்தித்ததாகத் தெரியவில்லை. ஒருசில மாதங்களுக்கு முன்பு காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, தனது பெண் குழந்தையுடன் கோட்டைக்குச் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்க முடியவில்லை என்று பேட்டி அளித்ததை அனைத்து ஊடகங்களிலும் பார்த்தோம். திராவிட மாடல் என்ற பெயரால் எந்தவித கொள்கையும் இல்லாமல், கொள்ளையடிப்பதை ஒரு கலையாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆட்சியாளர்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட் மூலம் தமிழகத்தை தொடர்ந்து ஆண்டுவிடலாம் என்ற நினைப்பில், எப்படியெல்லாம் மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் இதோ.ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக்கூட 'முதல்வரின் முகவரித்துறை', 'உங்கள் தொகுதியில் முதல்வர்', 'மக்களுடன் முதல்வர்', 'நீங்கள் நலமா?', 'மக்களுடன் முதல்வர் - நகரம் மற்றும் ஊரகம்' 'மக்களுடன் முதல்வர் - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்' என்று பல்வேறு பெயர்களைச் சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

mk stalin admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe