/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/epssssni.jpg)
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் வெளியேற முடியாமல் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இறந்து போன 5 பேரும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக இறந்துள்ளதாகவும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விமான சாகச நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டை ஆளுகின்ற முதல்வர், திட்டமிட்டு செயல்படாத காரணத்தினால் இன்றைக்கு மக்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவல நிலையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசின் செயலற்றத் தன்மையாக5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இனியாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, இப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்ற போது, உளவுத்துறை மூலமாக சரியான தகவலை பெற்று முன்கூட்டியே தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “மக்களை பாதுகாப்பது தான் அரசாங்கத்தினுடைய கடமை. உளவுத்துறை மூலமாக தகவலைப் பெற்று அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது அரசினுடைய கடமை. அரசு, இதை செய்ய தவறியுள்ளது. இதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஏற்க வேண்டும். ஏனென்றால், இந்த நிகழ்ச்சியை காண மக்கள் வர வேண்டும் என்று முதல்வர் தான் அழைப்பை விட்டார். அரசின் அழைப்பை நம்பி வந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எத்தனை பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்பதை அரசும், உளவுத்துறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ஒரு நிகழ்ச்சியை கூட சரியாக நடத்த முடியாத அரசாங்கத்தை, இன்றைக்கு ஒரு முதல்வர் ஆண்டு கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் தி.மு.க அரசாங்கம் தான் ஏற்க வேண்டும். சாக்குபோக்கு கூறி தப்பிப்பது சரியல்ல” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)