/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/epsni_14.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அண்மையில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து புதுச்சேரியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில்இதேபோல் வடமாநில மாணவி ஒருவர் தன் சக நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது மூன்று பேரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐஐடி மாணவி கொடுத்த புகாரின் பேரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம்.
பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)