Skip to main content

தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு கண்டனம்

 

EPS condemns Election Commission

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

 

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், “தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறி இருந்தது.

 

இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை என்ற தேர்தல் ஆணைய பதிலுக்கு பழனிசாமி தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. “சசிகலா வழக்கு நிலுவையில் இருந்தபோது பன்னீர்செல்வத்தின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது எப்படி” என அதிமுக சட்டப்பிரிவு நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “சிவில் வழக்கு 20 ஆண்டுகள் நிலுவையில் இருந்தால் அதுவரை சின்னத்தை ஒதுக்காமல் கட்சியை ஆணையம் முடக்குமா” என்றும் அதிமுக நிர்வாகி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !