EPS Comment on Marakanam Liquor Issue

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்மேலும் சில காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில்உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய குற்றவாளிகளைத்தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் அளிக்கப்படுகிறது' எனத்தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மரக்காணத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து தனது கண்டனங்களைத்தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

Advertisment

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் நிர்வாகத்திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவதுகள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.