EPS challenge to the CM mk stalin Can you stand face to face with me and discuss it privately

Advertisment

என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்?. கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது. கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக பி.எம். ஸ்ரீ ( PM Shri) திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு, அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?.

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்?. நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்தவர்கள்தானே நீங்கள்?. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?. 3வது மாடியில் சி.பி.ஐ. (CBI) ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?.

ஆனால் , பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அதிமுக. மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி. உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் தமிழ்நாடு மாடல் ஆட்சி. ஆனால், ஒன்றிற்கும் உதவாத, உருப்படாத ஒரு வெற்று மாடல் அரசை நடத்தி கொண்டு, தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு, ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான்.

Advertisment

அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்?. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன், உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா?. எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். பாத்துக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி, அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீதேன் வாயுவை உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையே புனித ஜார்ஜ் கோட்டையில் (04.01.2011) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

EPS challenge to the CM mk stalin Can you stand face to face with me and discuss it privately

முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் திமுக சார்பில், ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் இன்று (12.03.2025) மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “நம்முடைய உரிமைகளைப் பறிப்பதையும், தமிழ்நாடு கொச்சைப்படுத்தப்படுவதையும் நம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?. ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று, பதவி சுகத்துக்காக ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது. சுயமரியாதையும், இனமான உணர்வும் உள்ள தி.மு.க. ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போராடுகிற தி.மு.க.வின் போராட்டக் குணத்தைப் பார்க்க வேண்டிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.