EPS alleges DMK govt is fully responsible for student Darshini issue

சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அதன்படி இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வராததால் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இத்தககைய சூழலில் தான் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவிற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?.

Advertisment

செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி, அக் 2021- அனு, கீர்த்திவாசன், நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ், ஜூன் 2022- தனுஷ், ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி, ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ, செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி, மார்ச் 2023- சந்துரு, ஏப்ரல் 2023- நிஷா, ஆகஸ்ட் 2023- ஜெகதீசன், டிசம்பர் 2023- ஆகாஷ், அக்டோபர் 2024- புனிதா, மார்ச் 2025-இந்து, தர்ஷினி இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?.

தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்? மாணவி தர்ஷினி மரணத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள். மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. ‘நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment