EPS

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில், அதிக இடங்களில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் ”கோவை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியில் அதிக இடங்களில், வன்முறை நிகழ்ந்துள்ளது. குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற பல்வேறு வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுக்களை திமுகவைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தோல்வியடைந்திடுவோமோ என்ற பயத்தின் காரணமாகசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுக்களை வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பதிவு செய்திருக்கிறார்கள். சென்னை, கோவை மாநகராட்சியிலிருந்த காவல்துறை அதிகாரிகள், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதைத் தடுக்கவில்லை. காவல்துறையினருக்கு முன்பாகவே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்தார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் திருவல்லிக்கேணி தொகுதியில் 114வது வார்டிலும், 115வது வார்டிலும் அதிகாரிகளை மிரட்டி திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாகக் குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமென சில வீடியோக்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

Advertisment

மேலும் அவர், ”நகராட்சி தேர்தலில் ஜனநாயகம் செத்துவிட்டது. ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுவிட்டது. மக்களைச் சந்திக்கத் திராணியற்ற திமுக , செல்வாக்கு இழந்திருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது" எனவும் கூறியுள்ளார்.