ADVERTISEMENT

3,111 நபர்களுக்கு வேலை வாய்ப்பு; தமிழக அரசு ஓலா உடன் புதிய ஒப்பந்தம்

03:35 PM Feb 18, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

3,111 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.02.2023) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப் பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும் சிப்காட் ஓசூர் தொழிற் பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் சென்னையில் 110 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT