மின் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணத்தை ஊரடங்கு காலத்திற்குப் பிறகு கட்டலாம் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்கட்டணம் கணக்கெடுப்பு முறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகின்றது.
அதையடுத்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், கணக்கீடு எடுக்கப்படாத ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைக் கழிக்காமல் அதற்கான மின்பயணீட்டு அளவைக் கழிக்க வேண்டும் எனக் கோரியும், குறைக்கப்படும் கட்டணத்தைத் தவணை முறையில் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுதும் ஜூலை 21ஆம் தேதி போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் முட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் இல்லத்தின் முன்பாக கறுப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மின் கட்டணத்தைக் குறைக்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)