ADVERTISEMENT

மதிக்காத தேர்தல் ஆணையம்! - வருத்தத்தில் நாம் தமிழர் கட்சி!

04:48 PM May 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் வலிமையான பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போட்டியாக, மாற்று அரசியலை முன்னிறுத்தி சீமானின் 'நாம் தமிழர் கட்சி', கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்', டி.டி.வி.தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றம்க் கழகம்' ஆகியவை களத்தில் நின்றன.

‘மாற்றத்திற்கான எளியவர்களின் புரட்சி’ என்கிற பிரகடனத்துடன் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியைத் தனித்துப் போட்டியிட வைத்தார் சீமான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 சதவீத வாக்குகளைப் பெற்று 9-வது இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சி, தற்போது நடந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீத வாக்குகளையும், 2019-ல் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளையும், நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் 6.85% ஓட்டுடன் மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க. கட்சிகளைப் புறந்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது சாதாரண விசயமல்ல. பிரதான கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் அக்கட்சிக்கு மூன்றாவது இடத்தை மக்கள் கொடுத்திருந்தாலும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க.வை நெருங்க முடியாதபடி 10-ல் 1 பங்குக்கும் குறைவான வாக்குகளுடன் இருப்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

நா.த.க நிர்வாகிகளோ, "எங்களைப் போல, பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஜெயித்திருப்போம். மாற்றத்தை விரும்புகிற நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் எங்களை ஆதரிக்கிறபோது எங்கள் கட்சிக்கான வாக்கு வங்கியும் வலிமையாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் அரசியலில் கட்சி ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது எங்களிடம் வலிமையாக இல்லாதது துரதிர்ஷ்டம்தான். இனி அடுத்த தேர்தலுக்குள் கட்சியின் வாக்கு வங்கியை வலிமையாக்கும் முயற்சிதான் சீமானின் அடுத்த வியூகம்'' என்கிறார்கள்.

"அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகால கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிற கட்சிகளுக்கு எதிராக எளியவர்களான நாங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. கடுமையாக உழைத்து தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டோம்; கம்பீரமாக நிற்கிறோம். இனி, வெற்றிக்கான மாற்று வியூகம் தான் எங்களின் இலக்கு'' என்கிறார் சீமான்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் 6.85% வாங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பதிவிடாமல் பொதுவாக மற்றவையில் சேர்த்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT