Advertisment

"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது" - தொல்.திருமாவளவன்!

election campaign thol thirumavalavan mp at chidambaram

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுககூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாக்குச் சேகரித்தார்.

Advertisment

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மூக்கை நுழைத்து தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. மேலும் அ.தி.மு.க., பா.ம.க. முதுகில் ஏறி சவாரி செய்து உள்ளே நுழையப் பார்க்கிறது.

Advertisment

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு ஆறு சீட்டு என்றாலும் பரவாயில்லை என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூட்டணியில் முதல் கையெழுத்திட்டோம். மதவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமாக உள்ளது. பா.ஜ.க. அரசியல் கட்சி அல்ல, அந்த கட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தான், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைதான் பா.ஜ.க.வின் கொள்கை . ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமூக நீதிக்கு எதிரான இயக்கம்.

பா.ம.க., பா.ஜ.க. இரட்டைக் குழந்தைகள், பா.ம.க. சாதி வெறியைத் தூண்டுகிறது. பா.ஜ.க. மதவெறியைத் தூண்டுகிறது. எந்த காலத்திலும் நாங்கள் சீட்டுக்காக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி பேரம் பேசியது இல்லை. எங்களது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். கூட்டணிக்காகக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது. அ.தி.மு.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்ககளை பா.ஜ.க. விலைக்கு வாங்கி தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உட்கார திட்டம் தீட்டியுள்ளது. இந்திய தேசிய விடுதலைக்குப் போராடாத ஒரு இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியேஇருக்காது. இதனை பாரதிய ஜனதா கட்சி முழுங்கிவிடும். பா.ம.க.வை நீர்த்துப்போகச் செய்துவிடும். ஓபிசி இட ஒதுக்கீட்டை என்றுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்தது இல்லை. ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாரதிய ஜனதாவுடன், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

அனைத்துச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஒரு வார்டில் கூட வெற்றிபெற முடியாது. ஆனால், 20 தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரே காரணத்திற்காக தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த கோட்சே சுட்டுக் கொன்றான். சமூகநீதி என்று கூறும் பா.ம.க. இவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.

எம்.ஜி.ஆர்., இரட்டை இலை என்பது வேறு, ஜெயலலிதா இரட்டை இலை என்பது வேறு; எடப்பாடியின் இரட்டை இலை; பாரதிய ஜனதா கட்சியின் பின்புலத்துடன் உள்ள இரட்டை இலை ஆகும். இரட்டை இலை மற்றும் மாம்பழத்திற்கு வாக்களித்தால் அது பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக ஆகிவிடும். எனவே, சமூக நீதியைக் காக்க இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை வெற்றிபெறச் செய்யுங்கள்" இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Chidambaram thol.thirumavalavan vck election campaign
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe