மக்களே ஏற்றுக்கொண்ட ஒன்றிற்காகபழனிசாமி முதலைக் கண்ணீர் வடிப்பதாக எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னை கேபி பார்க் சாலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இதில் திமுக சட்டமன்ற துறை இணைசெயலாளரும் எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். பத்திரிகையில் செய்தி வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என்பதை மக்கள் ‘இது தேவையானது தான்’ என்று ஏற்றுக்கொண்டனர். மக்கள் போராடாதஒரு நிகழ்ச்சிக்கு அரசியலில் தன் இருப்பை காட்டுவதற்கு இத்தகைய நிகழ்ச்சியை நடத்துகிறார். அது மக்களுக்கான போராட்டம் அல்ல. முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இன்றைய முதல்வர் அதற்காக போராட்டம் நடத்தி வரியை குறைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பின் முறையாக ஆய்வுகளை நடத்தி குறிப்பிட்ட சதவீதம் தான் ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஏற்றப்பட்டது. இந்த உயர்வை மக்களும் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.