publive-image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், திமுக, அதிமுக, நாதக, அமமுக மற்றும் மநீம என ஐந்து முனை போட்டியைச்சந்தித்தது. அதில் திமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுக எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. நேற்று (7ஆம் தேதி) ஆளுநர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குதமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும், அவருடன் 33 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்யதுவைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இன்று, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வர், துறை சார்ந்த முக்கியமான பிரச்சனைகள் எது எது என உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எவை எல்லாம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதோ அவற்றை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.அவரின் வழிகாட்டுதல்படி உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆய்வு செய்யப்பட்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது; மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பல அரசு அதிகாரிகள் இங்கே பயின்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இந்த நூலகம் பராமரிக்காமல் அப்படியே உள்ளது. நூலகத்தைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி என்பது குறித்தும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சியாக நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள், பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கட்டணம் தொடர்பாக நல்லதொரு முடிவை மாநில அரசு எடுக்கும். பெற்றோர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.