/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anneps.jpg)
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இன்று (02-06-25) குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டு சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது. ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் குற்றவாளியான தி.மு.க அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி தி.மு.க ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
அதனால் தான் யார் அந்த சார்? என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். எஃப்.ஐ.ஆர் (FIR)-ல் குறிப்பிடப்பட்ட அந்த சார் யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த சார் விலக்கப்பட்டார் (SIR Ruled-out)?. எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? சாரை காப்பாற்றியது யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை, எந்த சாராலும் காப்பாற்ற முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)