Edappadi palaniswamy condemns Tamilnadu government for chakravarthi case

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் சோளங்கரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. இவர், பா.ம.க இளைஞரணி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு வெளியே சென்ற இவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதனை தொடர்ந்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து என்று கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பா.ம.கவினர் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், சக்கரவர்த்தி துப்பாக்கிச் சூட்டால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேதப் பரிசோதனை மூலம் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சக்கரவர்த்தி கொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான பிரபு மற்றும் மாதவன் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவு கொலை என்று தெரியவந்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ம.க அன்புமணி கண்டனம் தெரிவித்து தமிழக அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Edappadi palaniswamy condemns Tamilnadu government for chakravarthi case

Advertisment

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன். ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை. ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை. பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.