Edappadi Palaniswami's response Alliance with Vijay?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 23ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. ‘தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது... மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது’ என்று இடம்பெற்றிருந்த பாடலின் காட்சியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Advertisment

நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘நடிகர் விஜய் அவரது கட்சி பாடலில் மூணெழுத்து மந்திரம் மீண்டும் காலம் ஒலிக்குது என்று இடம்பெற்றிருந்த அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. உங்கள் தலைவரை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அது எங்களுடைய தலைவர்களுக்கு கிடைத்த பெருமையாக தான் பார்க்கிறோம். ஒரு கட்சியினுடைய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக எங்களுடைய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை. அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால் தான் தங்களுடைய கட்சியை நடத்த முடியும் என்ற முறையில் அவர் தெரிவித்திருக்கலாம். அப்படி தான் நான் நினைக்கிறேன். அந்த அடிப்படையில் அந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்” என்று கூறினார். விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எடப்பாடி பழனிசாமி, “அவர் இன்னும் முழுமையாக அரசியலில் வரவேயில்லை. கூட்டணி அமையுமா? அமையாதா என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.