Edappadi Palaniswami says This situation would not have come to this if ADMK had supported the resolution

தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisment

அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர். அரசியல் சாசன சட்டப்பிரிவு 200இன் கீழ்படி மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்'' என்றார்.=

Advertisment

இதனை தொடர்ந்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், “ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. அமைச்சர் கூறவேண்டிய கருத்துகளை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையை கூட்டியது ஏன்?. அதனால், மசோதாக்களில் இருக்கும் சட்டசிக்கல்கள் குறித்து ஆராய வேண்டும். மேலும், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெயலலிதா என்ற பெயரை நீக்கியது ஏன்?. என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு, விமானம் மூலம் கோவை வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “முதல்வருக்கும், ஆளுநருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தான் இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வேந்தர் நியமனத்தில் முதல்வருக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இப்போது ஆதரவு தெரிவிக்கிறது.

வேந்தர் நியமனத்தில் அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அன்று ஆதரவு தெரிவித்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்ட ஜெயலலிதாவின் பெயரை திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்றிவிட்டது. அதனால் தான் அவையை விட்டு வெளிநடப்பு செய்தோம். ஆனால், இதனை தெரிந்தும் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது என்பது அவர் திமுகவில் இருக்கிறார் என்பதை நிரூபணமாக்கியுள்ளது” என்று கூறினார்.