Edappadi Palaniswami says Law and order situation in Tamil Nadu is smiling

Advertisment

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்: செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை. பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை. பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை. மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என்பது யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.

நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கின்ற மன்னிக்கமுடியாத துரோகம். இது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு ‘போலி போட்டோஷூட் அப்பா’வை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.