Advertisment

“தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்” - இ.பி.எஸ் எச்சரிக்கை!

Edappadi Palaniswami opposes 12-hour work bill

தமிழகத்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனி மனித வாழ்க்கையிலும், அரசியலிலும் இரட்டை வேடம் போடுவதையே வாடிக்கையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்துள்ளனர். 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத்தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைப்பிடித்து வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

Advertisment

தகவல் தொழில்நுட்ப துறைகளிலெல்லாம் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாலும், உரிய சம்பளம் தராமல் இருப்பதாலும் பணியாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தச் சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்துபேசினார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று, எனது தலைமையிலான அம்மாவின் அரசுக்கு கெடு விதித்தார். அன்று மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் அரசால் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்படும் போதெல்லாம் எங்களைப் பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசு கொத்தடிமையாக மாறி 21.4.2023 அன்று தமிழகத்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் தலையாட்டும் அதன் கூட்டணிக் கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நீட் பிரச்சனையா? மத்திய அரசை கைகாட்டுவது; பெட்ரோல், டீசல் விலை உயர்வா? தன்பொறுப்பை தட்டிக் கழித்து மத்திய அரசை கைகாட்டுவது; மின் கட்டண உயர்வா? மத்திய அரசை துணைக்கு அழைப்பது; வீட்டு வரி, சொத்து வரி உயர்வா? மத்திய அரசு உத்தரவிட்டதால் செய்கிறோம் என்று சொல்வது;தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நில எடுப்பு செய்யும்போது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும்; தற்போது ஆளும் கட்சியானவுடன், நிலங்களை வலுக்கட்டாயமாக பறிப்பதும் என்று போலி நாடகம் ஆடுவது; அதேபோல், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு மக்களின் விளை நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடம் ஒப்படைப்பது, என்று நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள இந்த திமுக அரசுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, பத்தாண்டு கால தன்னலமற்ற எங்களின் மக்கள் சேவையைப் பற்றியோ குறை கூற எந்த அருகதையும் கிடையாது.

அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்ததில்லை. ஆனால், இந்த திராவிடமாடல் திமுக அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கிவிடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் இந்த அரசின் முதலமைச்சர் தன்னிலை உணர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தொழிலாளர்களின் நலனைக் காக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

workers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe