Edappadi Palaniswami insists More buses should be run to kilambakkam bus station

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகளை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் சுட்டிக் காட்டி பேட்டி அளித்துள்ளேன். சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்து நகரப் பேருந்து வசதி இல்லாமல், மெட்ரோ ரயில் வசதியுமின்றி, தனியார் வாடகை வாகனங்களுங்களுக்கு அதிக அளவு வாடகை கொடுத்து தங்களது குழந்தைகளுடனும், உடமைகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடையும் பயணிகள், தாங்கள் அனுபவித்த கடும் சிரமங்களை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளனர். இதை, இந்த திமுக அரசும், அதிகாரிகளும் பொருட்படுத்தவில்லையோ என்று பொதுமக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர்.

Advertisment

பொதுவாக, பயணிகள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வதைத்தான் பெரும் சிரமமாக கருதுவார்கள். ஆனால், சென்னைவாசிகளை அவர்களது இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடைவதையே பெரும் சிரமமாகக் கருத வைத்துவிட்டது.

நேற்று முன்தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அதிக அளவு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். அவரது பேட்டியை நம்பி, நேற்று (9.2.2024) இரவு தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், இன்று (10.2.2024) காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்ற காட்சிகளையும், தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகளையும், குறிப்பாக திருச்சிக்குச் செல்லும் பயணிகள் சாலை மறியல் செய்த காட்சிகளையும் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டி உள்ளன.

Advertisment

மக்கள் ஓரளவுக்குத்தான் பொறுமை காப்பார்கள். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்று முதுமொழி ஒன்று உண்டு. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.