Edappadi Palaniswami has said that there will be a change of government at central

1972 அக் 17ம் தேதி மறைந்த எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதன் 52வது ஆண்டு விழா தொடக்கத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக அக் 18 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அழைத்திருந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அதற்காக கிராண்டான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Advertisment

அ.தி.மு.க. மற்றும் அதன் முக்கிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவி தன் கையடக்கத்திற்குள் வந்ததையடுத்து ஓ.பி.எஸ்ஸைகட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி. அது சமயம் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களைக் கொண்ட நெல்லை, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளடக்கிய தென் மாவட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் தங்களின் கொதிப்பைக் கடுமையாக வெளிப்படுத்தினர்.

Advertisment

எடப்பாடியே தைரியமிருந்தால் தென் மாவட்டம் வந்து பார். திரும்பி போய் விடுவாயா என்பன போன்ற கடுமையான வாசகங்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் அலறின. அவை தீயாய்ப் பரவி எடப்பாடி வரை போய் தாக்கத்தை ஏற்படுத்தின. சொல்லப்போனால் அதனால் எடப்பாடியும் கடுமையான ஆத்திரத்தில் இருந்தாராம். அதனை வெளிக்காட்டவும் தன்னுடைய இருப்பைக் கொண்டு அவர்களுக்கு சவால் விடுவதோடு, அ.தி.மு.க. என்கிற கட்சி தன் பின்னால் திரண்டிருப்பதை காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயம் காரணமாக, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களைக் கொண்ட தென் மாவட்டங்களின் மத்திய நகரமான சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழா தொடக்கத்தினை தன்னுடைய தலைமையில் நடக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யும்படி எடப்பாடியே சொன்னதால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இது. இந்தப் பொதுக்கூட்டத்திற்குக் கூட, சவால் விட்ட ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் கூட்டமாகவே வந்து கலந்துகொண்டனர் என விவரமாகவே தெரிவித்தனர் வடக்கு மாவட்ட,ர.ர.க்கள்.

Edappadi Palaniswami has said that there will be a change of government at central

சங்கரன்கோவிலில் இருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமியின் தலைமையில் கூட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பானது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் நிதியளிப்பினைக் கொண்டு அ.தி.மு.க.வினரின் திட்டப்படி காண்ட்ராக்டின் அடிப்படையில் வேன்கள்மற்றும் ஆட்டோக்கள் மூலமாக கூட்டத்தைத் திரட்டியிருந்தனர். நகரில் நடத்தப்படுகிற மாநாடு போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிற வகையில் எடப்பாடியை வரவேற்று ப்ளக்ஸ்கள், நகரம் முழுக்க அ.தி.மு.க. கொடியினால் போர்த்தியிருந்தார்கள்.

நிகழ்ச்சியன்று காலை 12.20 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி, வரவேற்பிற்குப் பின் நெல்லை வழியாகவே சங்கரன்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். மாலை 4.30 மணியளவில் சங்கரன்கோவில் பெரிய ஆலயமான சுவாமி சங்கர நாராயணர் – ஸ்ரீ கோமதியம்மன் ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்ட எடப்பாடி, 5.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சியின் மேடை ஏறிவிட்டார். கருப்பு பூனைப் படை பாதுகாப்பிற்கு இணையான தனியாகத்தனியாரின் செக்யூரிட்டியினர் வாக்கி டாக்கியுடன் எடப்பாடிக்கு பாதுகாப்பாக வந்தனர். சொல்லும்படியான அளவு கூட்டமும் கொண்டு வந்து சேர்க்கப் பட்டிருந்தது.

கட்சியின் முக்கியமான 52ம் ஆண்டுவிழா தொடக்கம் என்பதால் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமிஉள்ளிட்ட பல மாஜிக்கள், முன்னணி நிர்வாகிகள் பலர் ஆப்சென்ட்.

மேடைக்கு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே பேசத் தொடங்கிய எடப்பாடி, கட்சியின் 52வது ஆண்டு விழா தொடக்கத்திற்கான விளக்க உரையை நிகழ்த்தியவர், “எம்.ஜி.ஆரின் சாதாரண தொண்டன் நான். இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன். தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அ.தி.மு.க., குழந்தைகள் பசியோடிருக்கக் கூடாது. பசியே இல்லை என்ற நிலை இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் எம்.ஜி.ஆர் அப்போதே சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தார். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் அதைத்தான் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார்கள்” என்றவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் கால திட்டத்தினைப் பட்டியலிட்டார்.

வழக்கம் போல் தி.மு.க.வை ஒரு பிடி பிடித்தவர், “நெல்லை மாவட்டத்திலிருந்த தென்காசியை தனி மாவட்டமாகப் பிரித்து பல முன்னேற்றத் திட்டத்தினைக் கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதால் பலர் அச்சத்தில் இருக்கிறார்கள். தேசிய கட்சிகள் மாறி மாறி மத்தியில் ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. யாருக்கும் அஞ்சியதில்லை. பயப்படவில்லை. தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். நாங்கள் பா.ஜ.க.வின் ‘பி’டீம் அல்ல. மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார் உச்சக்கட்டக் குரலில். எடப்பாடி இப்படி பேச்சை முடித்தது கூட்டத்தினரின் கரவொலியை மட்டுமல்ல பரபரப்பையும் கிளப்பிவிட்டது.

மத்திய பா.ஜ.க.வின் பங்காளியாக இருந்த அ.தி.மு.க.வை, அதன் தலைவர்களை பா.ஜ.க.வின் தமிழககட்சி முன்னணி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அதிருப்தி மற்றும்உரசல்கள் காரணமாக அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பா.ஜ.க. உறவிற்கு ஃபுல் ஸ்டாப் வைத்ட்னர். உறவு அறுந்தது என்று பகிரங்கமாகவும் முகம் சிவக்கும்படியான ஆத்திரத்திலும் வெளிப்படுத்தினர். தற்போது கட்சியிருக்கிற நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாய நிலையிலிருந்த எடப்பாடி, பா.ஜ.க.விற்கு நன்றி. மீண்டும் வரவேண்டாம் என்று பெரிய வணக்கம் போட்டுவிட்டார்.

Edappadi Palaniswami has said that there will be a change of government at central

ஆனால் எடப்பாடியின் நடவடிக்கை பா.ஜ.க.வின் டெல்லி முக்கியப் புள்ளிகளை சற்று பதற்றத்தில் ஆழ்த்தினாலும் தேர்தலுக்குள் எடப்பாடியை தங்கள் வசம் திருப்பிவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடிக்கு மறைமுகமான குடைச்சல்கள், ரெய்டு பீதியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மிரட்டல்கள் தன்னை ஒடுக்கிவிடாது என்பதை வெளிப்படுத்தவும் அதே சமயம் அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தால், தேர்தலுக்குப் பின்பு அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் போய்விடும் இதனால் அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் மக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில்தான், நாங்கள் பா.ஜ.க.வின் ‘பி’டீம் அல்ல என்று கடும் போடு போட்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.

தற்போதைய அ.தி.மு.க.வின் க்ளைமேட் இது. தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க.வின் அரசியல் சீதோஷ்ணம் மாறலாம் என்கிறார்கள். பின்னர் எடப்பாடி பேசும்போது மக்கள் கலைந்து சென்றனர். பின் வரிசையில் உள்ள காலியாக உள்ள சேர்கள் நமது கண்களுக்கு காணப்பட்டது.