Skip to main content

“வேலையில்லா விரக்தியில் இளைஞர்கள்; நெருக்கடி நிலையில் தமிழ்நாடு” - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

Published on 27/05/2025 | Edited on 28/05/2025

 

Edappadi Palaniswami has made a series of allegations against the DMK govt

பிரபல ஆங்கில பத்திரிகைக்கு கட்டுரை எழுதிய அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி,  திமுக அரசின் நிர்வாகம் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழகத்தை ஆளும் திமுக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அடுக்ககடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையில், “தொழில் வளர்ச்சிக்கும், புதுமையான திட்டங்களுக்கும் பேர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. நீண்டகாலமாக இப்படி நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம். பல பத்தாண்டுகளாக (தசாப்தங்களாக) தொழில்துறை வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் ஒரு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வந்தது. கடின உழைப்பு மூலம் மேல்நோக்கிய முன்னேற்றத்தை எட்டும் ஓர் இடமாக தமிழ்நாடு விளங்கியது.ஆனால் இன்று, அந்த வாக்குறுதிகள் எல்லாம் உடைந்துபோய் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் நடுவில் அதிகமாக இருக்கிறது. இதை வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. (அதைவிட மேலான பிரச்சினை இது) இது சத்தமில்லாத ஓர் நெருக்கடி நிலை. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு இதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்த பிரச்சினையைக்களைய உரிய முறையில் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் 5.2 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விட அதிகம். புள்ளிவிவரங்கள் இந்த பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளன.  தகுதி குறைவான வேலை என்பதும் கூட ஒரு வகையான வேலையில்லாத நிலைமைதான். திறமை வாய்ந்த இளைஞர்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது, வாய்ப்புகள் குறைந்து கரைந்து வரும் நிலையையே பிரதிபலிக்கிறது. பல லட்சம் குடும்பங்களை இது பாதிக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, அதன் ‘சாதனைகளை’ விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்த மட்டுமே முயற்சிக்கிறது.

தற்போதுள்ள அரசு வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறது. 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் சந்திப்பை நடத்தி, ரூ.6.64 லட்சம் கோடி முதலிடூட்டை ஈர்த்து விட்டதாக அது  பெருமைப்பட்டுக் கொண்டது. 14.5 லட்சம் வேலை வாக்குறுதிகளைப் பெற்றுவிட்டதாக கூறிக்கொண்டது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத அளவில், வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. வெறும் 46 ஆயிரம் வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட வாக்குறுதியில், இது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. இந்த வேலைகள் கூட எம்.எஸ்.எம்.இ.க்களைச் சேர்ந்த வேலை வாய்ப்புகள். இந்த வேலைகளில் பாதுகாப்போ, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளோ, போதுமான, சரியான இழப்பீடுகளோ கிடையாது. அதுபோன்ற வேலைகள்தான் இவை. ஆசைக்கும் பொறுப்பு ஏற்பதற்கும் இடையில் இங்கே ஒரு ஆபத்தான பெரிய இடைவெளி இருப்பதை நாம் காண்கிறோம். வேலையில்லா திண்டாட்டத்தின் விகிதாசாரம்  அதிகரிப்பது மட்டும்தான் துன்பம் என்று நினைத்து விடக்கூடாது. அரசின் திட்டங்கள் எப்போதும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நம்பத்தகுந்த இயந்திரங்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்பின்மை அதிகரிப்பதன் மூலம் அரசின் திட்டங்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை குலைந்துவிடும். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. புதிய வாய்ப்புகளை விரிவாக்குவதும், உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதும், வருங்காலத்துக்கு ஏற்றபடி திறமை நிறைந்த இளைஞர்களை உருவாக்குவதும் எங்களது நீண்டகால திட்டங்களில் பதிந்திருந்தன.  மறைந்த ஜெ.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 2011ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பெரிய அளவில் தொழில்துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை கொண்ட எங்களது மறைந்த தலைவரின் தலைமையில், 2026ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில், ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு வாக்குறுதிகள் ஈர்க்கப்பட்டன.  அவற்றில் 65 விழுக்காடு நனவானது. 2.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உலக அளவிலான பொருள் உற்பத்திக்கும், தயாரிப்புக்கும் ஒரு நம்பகமான இடமாக விளங்கியது. பெருமைக்குரிய விடயம் என்னவென்றால், அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக சங்கிலியின் (குளோபல் சப்ளை செயினின்) ஒரு பகுதியாக தமிழகம் விளங்கியது.

2017ஆம் ஆண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனம் திருப்பெரும்புதூரில் ஐபோன் பாகங்களை ஒன்று சேர்த்து ஐபோன் உருவாக்கும் பணியைச் செய்தது. 2019ஆம் ஆண்டு அதன் பணிகள் இன்னும் அதிகரித்தன. மின்னணு உற்பத்தியில் மிக உயர்ந்த இடத்தை நோக்கி நமது மாநிலம் உயர்ந்ததற்கான அறிகுறிகள் இவை.
ஃபாக்ஸ்கான், டெல், நோக்கியா போன்ற நிறுவனங்கள் அவற்றின் முக்கிய பணிகளை தமிழகத்தில் மேற்கொண்டன. பல லட்சம் பேர்களுக்கு இவை வேலைவாய்ப்பை வழங்கின. இப்படி வேலை வாய்ப்பைப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரக (கிராமப்புற) பகுதிகளைச் சேர்ந்த அல்லது அரைகுறையான நகர்ப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்.

சமூகத்தின் உருமாற்றத்துக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு வாகனம். அது வெறும் பொருளாதார ரீதியான ஓர் எண் அல்ல. 2017 முதல் 2021 வரை நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில், இந்த தொலைநோக்குப் பார்வையை நான் முன்னெடுத்துச் சென்றேன். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையை நாம் கையில் எடுத்தோம். 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கும், ஒன்றரை லட்சம் வேலைகளுக்கும் நாம் இலக்கு வைத்தோம்.  2019ஆம் ஆண்டு ஏதர் எனர்ஜி நிறுவனம் இரு சக்கர வாகனங்களையும், லித்தியம்-அயன் மின்கலங்களையும் ஓசூர் பகுதியில் உருவாக்க முன்வந்தது. ஓசூர் பகுதி, மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு மையமாக உருவெடுப்பதற்கு ஒரு சிறந்த முன்னெடுப்பாக இது அமைந்தது.

2020 ஆண்டு டிசம்பர் மாதம் நமது அரசாங்கம் ஓலா  எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஓசூரில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் இருசக்கர வாகன தொழிற்சாலை ஒன்றை அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாயிரம் தனிநபர்கள் இதன்மூலம் வேலை வாய்ப்பு பெற இது வழிவகுத்தது.  இதுபோன்ற திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட முதலீடுகள் மூலம், இந்திய மின்சார வாகனத் தயாரிப்புத்  துறையில், தமிழகம் தலைமையிடத்தைப் பிடிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்டங்கள் தோறும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள் கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சியையும் நாம் உறுதிப்படுத்தினோம், வலியுறுத்தினோம்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் மட்டுமே 1.1 லட்சத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை ஈர்த்தது. தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து அம்மா திறன் பயிற்சி மையங்களை உருவாக்கி, 1.9 லட்சம் இளையோருக்கு உடல்நலம், சுகாதார பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ்  என்ற சரக்குப் போக்குவரத்து, சில்லறை விற்பனை போன்ற துறைகளில் சான்றிதழ்களை வழங்கினோம். இந்த துறைகள் அனைத்துமே வளர்ந்து வரும் துறைகள் ஆகும். கிராமப்புறங்களை மேம்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தினோம். இது 26 ஆயிரம் சிறு(நுண்) தொழில்களையும், 80 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியது. பயிர் பதப்படுத்துதல் மற்றும் ஊரக சேவை தொடர்பான விடயங்களில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாகின.

எங்களது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்திகள், உள்ளூர் சார்ந்த உத்திகளாக இருந்தன. இதற்கும், தற்போதுள்ள நிர்வாகத்தின் உலக முதலீட்டாளர் சந்திப்புக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. தற்போதுள்ள அரசின் அறிவிப்புகள் விளம்பரத் தன்மையுடன் வெறும் தலைப்புச் செய்திகளாக மட்டுமே உள்ளன. அவற்றில் ஒளிவு மறைவற்ற தெளிவுத்தன்மை இல்லை. நம்பகத்தன்மை இல்லை. எந்தெந்த பாதையில் எப்படி பயணிக்கப் போகிறோம் என்பதற்கான  தெளிவான வரைபடம் இல்லை. தற்போதைய அரசு கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தெளிவில்லாமல் உள்ளன. சரியான கால அளவு, வேலைகள் எப்படி பகிரப்பட போகின்றன என்பதை பற்றியெல்லாம் அவற்றில் தெளிவாக எதுவும் இல்லை.

திமுகவின் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக உறுதி அளித்தது. தற்போது 4 ஆண்டுகள் கழித்து இவற்றில் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த வேலை வாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டன? இவற்றால் பலனடைந்தவர்கள் யார் யார் என்பது பற்றிய தெளிவாகச் சொல்ல எந்த ஒரு தரவும் இல்லை. எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதைத் தெளிவுபடுத்த தன்னிச்சையான அமைப்புகளின் ஆய்வுகள், தணிக்கைகளும் இல்லை.

அரசு நடத்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் போன்றவை ஆட்சேர்ப்பு மற்றும் பணி அமர்த்தும் வேலைகளை நிறுத்தி வைத்துள்ளன. அரசுத்துறைக்கு ஆள் எடுப்பது நின்று விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளம் பட்டதாரிகள் அல்லல்படும் நிலை உருவாகி உள்ளது. விண்ணப்பங்களை ஏதோ வெற்றிடத்தை நோக்கி அவர்கள் அனுப்பும் நிலை.இந்த தோல்விகளுக்கு ஆழமான ஒரு தொடர்ச்சியும் உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பின்படி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் திறமை வாய்ந்த பணியாளர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்வது 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நமது இளைஞர்கள் நோக்கமின்றி வெளியேறுகிறார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. விரக்தி காரணமாக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதுதான் அர்த்தம். 

பிள்ளைகளைப் படிக்க வைத்தால், வாழ்வு வளமாகி விடும் என்று கனவு கண்ட குடும்பங்கள், இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து பிள்ளைகள் அனுப்பும் கொஞ்ச பணத்தை வைத்து வாழ வேண்டிய நிலை.நாம் கனவு கண்ட, நாம் காண விரும்பிய தமிழ்நாடு இது அல்ல. நாம் இப்போது ஒரு சிக்கலான, முக்கியமான சாலை சந்திப்பில் இருக்கிறோம். நம் மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி ஒரு முக்கியமான கேள்வி. அவசரமான கேள்வி. நமது பிள்ளைகளுக்கு நிலையான வேலைகள் கிடைக்குமா? அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை அவர்கள் பெறுவார்களா? சொந்த ஊர்கள், நகரங்களை விட்டு போகாமல் அவர்களுக்கு வேலை கிடைக்குமா? இதுதான் நம் முன் உள்ள கேள்வி.

இதற்காக வேலை உருவாக்க சிறப்புப்படை ஒன்றை நாம் உருவாக்கப் போகிறோம். இந்த படை காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலான தணிக்கைகளை நடத்தும். தற்போது தடைபட்டு கிடக்கும் சிப்காட் பிரச்சினைகள், தொழிற்சாலை வளாகங்கள், எம்.எஸ்.எம்.இ பூங்காக்களை நாம் சரிசெய்து புதுப்பித்து மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்.  மிகத் தெளிவாக, குறிப்பிட்ட கால அளவில் இலக்குகளைத் திட்டமிட்டு இவற்றைக் கொண்டு வர விரும்புகிறோம். வளர்ந்து வரும் மின்சார வாகனங்கள், செமி கண்டக்டர் எனப்படும் குறை கடத்திகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் இந்த மாற்றங்களைக் கொண்டு வர விரும்புகிறோம். பழைய காலத்து வேலை வாய்ப்புச் சந்தையைப் போல இதை நாம் உருவாக்க விரும்பவில்லை.

வேலைகள் என்பவை எண்களை விட பெரியவை என்பது நமக்கும் தெரியும். வேலைகள் என்பவை கண்ணியம், திடத்தன்மை, நம்பிக்கை போன்றவற்றின் பிரதிநிதிகள். தமிழ்நாட்டு இளையோர்கள், இனிமேலும் காத்திருக்காமல், இடம் பெயராமல் அவநம்பிக்கையில் வாழாமல், சொந்த நிலத்தில் பணியாற்றி, இந்த மண்ணை கட்டியமைத்து உருவாக்க வேண்டும். அவர்களுக்கான வருங்காலத்தை நாம் அமைக்க வேண்டியது கட்டாயம்” என்கிறார்.

சார்ந்த செய்திகள்