Skip to main content

“தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாகத்தான் பார்க்கிறார்கள்”  - எடப்பாடி பழனிசாமி

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Edappadi Palaniswami criticized  National parties

 

அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் நேற்று (17-10-23) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கலந்து கொண்டு பேசினார்.

 

அதில் அவர், “தமிழகத்தில் தற்போது திமுகவின் குடும்ப ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி தான் திமுக. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித புதிய திட்டங்களும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் புதிதாக ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார் முதல்வர். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியில் கூறினார்கள். ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதை மறந்துவிட்டார்கள். இதை எல்லாம் திசை திருப்பவே சனாதனம் குறித்து பேசி வருகின்றனர். 

 

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் பலர் அச்சப்படுகின்றனர். அதிமுக யாருக்கும் அஞ்சியதில்லை. எந்த தேர்தல் வந்தாலும், அதிமுக வெற்றி பெறும். தேசிய கட்சிகள் மாறி மாறி மத்தியில் ஆட்சி அமைக்கின்றன. ஆனால், அந்த கட்சிகள் தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுவது இல்லை. அவர்கள் தமிழ்நாட்டை துரும்பாகத்தான் பார்க்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து கண்டிப்பாக வெற்றி வெறுவோம். என்றும் தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுப்போம். ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்