Advertisment

“நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Edappadi Palaniswami obituary for manmohan singh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மன்மோகன் சிங் மறைவையொட்டி இன்று நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும், இன்று முதல் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவரது இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை (28-12-24) நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், மறைந்த மன்மோகன் சிங்கிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளதாவது, ‘நாட்டுக்கு ஆற்றிய சேவைகளால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார். களங்கமற்ற அரசியல் வாழ்வு, மிகுந்த பணிவு மிக்கவர்; பொருளாதாரத்தை சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியவர் மன்மோகன் சிங்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் (1982-1985) மற்றும் மத்திய நிதி அமைச்சர் (1991-1996), அவரது பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. எல்.பி.ஜி (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) மாதிரியின் வளர்ச்சியானது நாட்டிற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது.

ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நிர்வாகிகளுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என இரங்கல் தெரிவித்துள்ளார்.

condolence eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe