Skip to main content

''வருமான வரி சோதனையோடு நிறுத்திவிடக் கூடாது'' - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

nn

 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தபோது அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால், அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டியிருந்ததால் அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அசோக்கின் ஆதரவாளர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் மீது நடத்திய தாக்குதலில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கரூரில் வருமான வரி சோதனை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலைக்கு உதாரணமாக உள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழலை விட பல மடங்கு தமிழகத்தில் நடந்துள்ளது. வருமான வரி சோதனையோடு நின்றுவிடாமல் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்