ADVERTISEMENT

‘எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது’ - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி

06:10 PM Feb 02, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதில், 'தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.

நாளை அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT