Advertisment

‘மதுரையில் உண்ணாவிரத போராட்டம்’  - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Edappadi Palaniswami announcement for Fasting in Madurai 

Advertisment

மதுரையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயத்தினர் பிரமலைக் கள்ளர் ஆவர். இந்த சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்குத் தாங்களே 'கள்ளர் காமன் பண்ட்' மூலமாகவும், தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்துக்கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடமிருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, கடந்த 17ஆம் தேதி (17.8.2024) அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அந்த அறிக்கையில் திமுக அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் அச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலை வாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற, பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதேபோல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும், தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி (24.8.2024) சனிக் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

schools madurai admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe