Edappadi Palaniswami announcement on ADMK is responsible for actress Gautami

Advertisment

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, நடிகை கௌதமி பா.ஜ.கவிலிருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச்சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில், நடிகை கெளதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சன்னியாசி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கௌதமி நியமிக்கப்படுகிறார். அதே போல், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் துணைச் செயலாளராக தடா. து. பெரியசாமி நியமிக்கப்படுகிறார். கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக, ஃபாத்திமா அலி நியமிக்கப்படுகிறார். மேலும், கழக விவசாயப் பிரிவு - துணைச் செயலாளராக பி. சன்னியாசி நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.