ADVERTISEMENT

கலைஞர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி நடந்ததில்லை: எடப்பாடி பழனிசாமிக்கு ஈஸ்வரன் கண்டனம்

12:36 PM Aug 29, 2018 | rajavel


ADVERTISEMENT


முதலமைச்சரின் பயணப் பாதையில் போக்குவரத்தை நிறுத்துவதும், காட்டுகின்ற கெடுபிடியும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதோ, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதோ இப்படி நடந்ததில்லை என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில்,

கொங்குநாட்டு மக்கள் அனைவரும் எளிமையைப் பின்பற்றுபவர்கள். உலக மக்கள் நம்மை விரும்புவதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாணயமும், எளிமையும் தான். நாளாக நாளாக முதலமைச்சரின் பயணங்கள் எளிமையை விட்டு விலகுவது போல் தோன்றுகிறது. அடிக்கடி கொங்கு மண்டல விஜயம் நடைபெறுவதால் மக்கள் அதை உணர்கிறார்கள். தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

வழக்கமாக சேலத்தில் டீ குடித்த அதே கடையில் எளிமையாக டீ குடிக்க முதலமைச்சர் விரும்புகிறார் என்று அறிகிறோம். ஆனால் காவல்துறையும், அதிகாரிகளும் முதலமைச்சரின் எதிர்பார்ப்பு ஆடம்பரமாக இருப்பதுபோல மக்களை உணர வைக்கிறார்கள். நான் ஏழை விவசாயி, எளிமையானவன் என்று முதலமைச்சர் சொல்லிக் கொண்டாலும் அதிகாரிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற உண்மையான முகம் வேறு மாதிரி இருக்கிறது.

முதலமைச்சரின் பயணப் பாதையில் போக்குவரத்தை நிறுத்துவதும், காட்டுகின்ற கெடுபிடியும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது இதே அமைச்சர்கள் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் என்பதை மக்கள் பார்த்து இருக்கிறார்கள். அதேபோல தொடர்ந்து தடம் மாறாமல் இருந்தால் மக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்காமல் இருக்கும்.

முதலமைச்சர் பயணிக்கின்ற பாதையில் வேறு கட்சிக் கொடியே இருக்கக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பதேன். எங்களுடைய பல நிகழ்ச்சிகளில் கட்டிய கொடியைக் கூட அதிகாரிகள் முதலமைச்சர் இந்த வழியாக வருகிறார் என்று அவிழ்த்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் சென்ற பின் அதே அதிகாரிகளே கூட கொடியை திரும்ப கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதோ, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதோ இப்படி நடந்ததில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தென்படவில்லை என்று கூறியது தான் நினைவுக்கு வருகிறது. மற்ற கட்சிகளின் கொடிகளையே பார்க்கக் கூடாது என்று முதலமைச்சர் முடிவெடுத்திருப்பது தமிழகம் பூராவும் வேறு கட்சிகளின் அடையாளங்களே இல்லை என்று பேசுவதற்கா. இப்போது கூட மறைந்த பாரதப்பிரதமர் வாஜ்பாயி அவர்களின் அஸ்திக்கு சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த மக்கள் வந்த போது முதலமைச்சர் வருவதற்கு 2 மணி நேரம் முன்பே காவல்துறை கெடுபிடிகளை காட்டத் துவங்கினார்கள். இதுவெல்லாம் முதலமைச்சரின் உத்தரவா அல்லது அவருக்கு தெரியாமலேயே இது நடக்கிறதா. முதலமைச்சரும் அமைச்சர்களும் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிரமத்தைக் கொடுக்காத நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT