/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4332.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர், “உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இல்லையென்றால் தாங்களாக ஒரு குழு அமைத்து விசாரிப்போம் என்று தீர்ப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை, செந்தில் பாலாஜி வீடுகள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனை நடத்திய அன்று காலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்த செந்தில் பாலாஜி, முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னார். ஆனால், ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறையின் முன் ஆஜராகவில்லை.
அதனைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் சமூக வலைத்தளத்தில் பேசினார். அவர் பேச்சில் அவ்வளவு பதற்றம். ஆனால், அந்த பதற்றம் ஏன் என்று தான் தெரியவில்லை.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ரூ. 30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் தடுமாறுகிறார்கள் என ஆடியோ வெளியிட்டார். இதில் பெரும்பான்மையான பணம் செந்தில் பாலாஜி மூலம் வந்ததாக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகள் மூலம் செய்திகள் வந்தன. இந்நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதும் அவர் இந்தச் செய்தியை சொல்லிவிடப் போகிறார் எனும் பயத்தில் முதல்வர் சென்று அவரை பார்க்கிறார். செந்தில் பாலாஜி ஏதாவது சொல்லிவிட்டால் தன் குடும்பமும் பாதிக்கும், அரசியல் வாழ்க்கையும் சூனியமாகும் ஆட்சியும் போய்விடும் எனப் பதறி பேட்டி அளிக்கிறார்.
முன்னதாக அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தபோது எதுவும் பேசவில்லை. அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை ஆ. ராசாவும், கனிமொழியும் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். அப்போது இந்த ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லை. அப்போது ஸ்டாலின் அவரது சகோதரியைக் கூட திஹார் சிறைக்குச் சென்று நேரடியாக சந்திக்கவில்லை. ஆனால், இன்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் இவ்வளவு பதற்றம் எதற்காக?
டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழ்நாட்டில் சுமார் 6000 இருக்கிறது. இதில், 5,600 பார்கள் இருக்கின்றன. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 3,500 பார்களுக்கு டெண்டரே விடவில்லை. இந்த பார்களை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய காவல்துறை இன்று திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் அருந்தியவர்கள் 23 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முறைகேடாக நடந்த பார்களை கண்டறிந்து சீல் வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக அரசுக்கு இந்த முறைகேடு பார்கள் தெரியவில்லையா. இதுபோல், தமிழ்நாடு முழுக்க 3500 பார்கள் முறைகேடாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் முறைகேடாக வரும் பணம் எல்லாம் முதலமைச்சர் குடும்பத்திற்கு தான் சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியை எல்லாம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடுவாரோ எனப் பதறிப்போய் பார்க்கிறார்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)