
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த புதன்கிழமை (07.04.2021) இரவு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (வயது 92) உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தேனி மாவட்ட அதிமுகசெயலாளர் சையதுகான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் அவரது உடல் வியாழக்கிழமை மாலையில் உத்தமபாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சேலம் நகரில் உள்ள தனது வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுப் போடுவதற்காக சேலம் சென்ற முதலமைச்சர், ஓட்டு போட்டுவிட்டு சேலத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
நேற்று காலை வீட்டில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து சிறிது நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோரும் சந்தித்தனர்.
இந்தநிலையில், தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானது குறித்து துக்கம் விசாரிக்க இன்று (09.04.2021) சேலத்தில் இருந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமி தேனிக்கு செல்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)