Skip to main content

எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் அறிவிப்பு; உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

edappadi palanisamy team erode by election candidate announced 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஒருவிதப் பதற்றத்தோடு இருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணியில் இருந்த த.மா.காவை தவிர பல கட்சிகள் ஆதரவு தராத நிலையில், பிரதான கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு என்று வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக ஒருபுறம் ஓபிஎஸ் அணி, மறுபுறம் ஈபிஎஸ் அணி என பேச்சுவார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வந்தது.

 

இந்த நிலையில் ஏதாவது ஒரு முடிவை சொல்லுங்கள் என எடப்பாடி காத்துக்கொண்டே இருந்தார். மற்றொரு பிரச்சனையாக சின்னம் கிடைப்பதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு பிரச்சனையும் பெரிதாக இருந்தது. முதலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை தேர்தலில் போட்டியிடுங்கள் என எடப்பாடி கேட்டுக்கொண்டாராம். ஆனால் அவர் பின் வாங்க, தற்போது அறிவித்துள்ள வேட்பாளரான தென்னரசுவும் ஒரு கட்டத்தில் எனக்கு தேர்தலில் நிற்கும் ஆசை இல்லை என எடப்பாடியிடம் கூறியதாக தெரிவிக்கின்றனர்.

 

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களே செலவு செய்ய வேண்டும் என முதலில் கூறப்பட்டதாம். பிறகு அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து தென்னரசுவை சமாதானப்படுத்தி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு 2001 முதல் 2006 வரை, அடுத்தாக 2016 முதல் 2021 வரை என இரண்டு முறை இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவில் ஒரு எளிய மனிதராக இருப்பவர் தென்னரசு. ஒரு வழியாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார் என அதிமுக எடப்பாடி அணியினர் உற்சாகமாக உள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சாதி மறுப்பு திருமணம்; 16 வயது சிறுமி கொடூர கொலை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Tragedy of 16-year-old sister for attempted incident

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (24). இவருக்கு, 10ஆம் வகுப்பு படிக்கும் ஹாசினி்(16) என்ற தங்கை இருந்தார். இந்த நிலையில், சுபாஷும் சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சுவும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மஞ்சுவின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023ஆம் ஆண்டு மஞ்சுவும், சுபாஷும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர், சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (06-03-24) சுபாஷ், தனது தங்கையை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மஞ்சுவின் தந்தை சந்திரன், வேன் ஒன்றை ஓட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். அதன் பின்னர், வேனை அங்கே நிறுத்திவிட்டு சந்திரன் தனது மனைவியை அழைத்து தலைமறைவானார். இந்த பயங்கர விபத்தில், சுபாஷ் மற்றும் ஹாசினி பலத்த காயமடைந்தனர். 

Tragedy of 16-year-old sister for attempted incident

இந்த கொடூர சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சுபாஷ் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தங்கை ஹாசினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த ஈரோடு மாவட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சந்திரன் மற்றும் சித்ராவை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை திருமணம் செய்த மருமகனை கொலை செய்யும் முயற்சியில், மருமகனின் தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.