Advertisment

ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது... எடப்பாடி பழனிசாமி கண்டனம்

eps

ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது என புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Advertisment

"வருடங்கள் கரைந்தாலும், வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளலாகவும், சாதி, மதங்கள் கடந்த சமத்துவத்தின் அடையாளமாகவும், இன்றளவும் ஏழை, எளியோரது இல்லத்திலும், உள்ளத்திலும் நிறையாசனமிட்டு வீற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவராகவும், ஒட்டுமொத்த உலக தமிழர்களால் போற்றி வணங்கப்படுகிற பாரத ரத்னா இதயதெய்வம் புரட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.

இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்றுசமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துகளையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றை சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது.

ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சி கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்”இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

admk statue Puducherry statement Edappadi Palaniasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe