சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியது முழுக்க முழுக்க பொய் தகவல் என மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை நான் ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக உண்மைக்கு மாறான முழுக்க முழுக்க ஒரு பொய்ச் செய்தியை, நான் பேசாத ஒரு வார்த்தையை வழக்கம் போல் தன் பாணியிலேயே இட்டுக்கட்டி அதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் பேசியுள்ளார். நான் நாடாளுமன்றத்தில் பேசியவற்றின் பதிவுகளை இங்கே அப்படியே தந்துள்ளேன்:

EPS - Dayanidhi Maran

தயாநிதி மாறன்: கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த காலகட்டம், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பொற்காலமாகும். அப்போது, தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்கள் கிடைத்தன. அதன்பின், எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

இப்போது கொண்டு வர முயற்சிக்கும் சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை கூட கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. சென்னையை விட்டு வெளியில் வரவே 2 மணி நேரம் ஆகிறது... (அதிமுக எம்பிக்கள் குறுக்கிட்டு கூச்சலிடுகின்றனர்)

Advertisment

தயாநிதி மாறன்: நாங்கள் அந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம்... (மீண்டும் குறுக்கிடுகின்றனர்)

தயாநிதி மாறன்: எனது பேச்சை முடிக்க விடுங்கள். (கூச்சல், அமளி)

தயாநிதி மாறன்: நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம், அரசியல் செய்வதல்ல. சென்னையை விட்டு வாகனங்கள் வெளியில் வருவதற்கு பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த உண்மையான பிரச்னையை கையாளாமல், வேறு பிரச்னையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

எனவே, சென்னையில் நெரிசலை குறைக்க வேண்டும், தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவற்றில் எந்த இடத்தில் சேலம் எட்டு வழிச்சாலையை நான் ஆதரித்துப் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கிட வேண்டும். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தது என்பார்கள், அதைப்போல, இந்த ஆட்சியையும் பொய்களைப் பேசியே நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி, நான் பேசிய குறிப்பை முழுவதுமாக பார்த்த பிறகாவது இது போன்று கட்டுக்கதைகளை வெளியிடாமல் இருப்பது அவருக்கும், அவர் வகிக்கக்கூடிய பதவிக்கும் நல்லது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.