"நீங்கள் என்ன ஆட்சிக்கு வரப் போகிறீர்களா?" - எடப்பாடி பேச்சு!

Edappadi palanisamy speech at ulunthurpet function

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகள், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி, அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அனுசரித்துவருகின்றன.

அதன்படி நேற்று உளுந்தூர்பேட்டையில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவரணிச் செயலாளர் பாக்கியராஜ், அமைச்சர் சிவி சண்முகம், எம்எல்ஏ குமரகுரு, உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசியஎடப்பாடி பழனிசாமி,

"நமது உயிருக்குயிரான தமிழ்மொழியை காப்பதற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தஇந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே வாழ்க அவர்களது புகழ் வாழ்க அன்னை தமிழ் மொழி.இந்தப் பூமி உள்ளவரை அவர்களது புகழ் நிலைத்திருக்கும் என்று மொழிப்போர் தியாகிகளைப் புகழ்ந்து பேசினார்.ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழறிஞர்களுக்கு தமிழ் பண்டிதர்கள் பெயர்களில் அதிலும் குறிப்பாக மறைமலை அடிகளார், அயோத்திதாசர், வள்ளலார், இளங்கோவடிகள், காரைக்கால் அம்மையார் ஆகியோர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுவருகிறது. தமிழ் பெருமைப்பட ஜெயலலிதாவின் அரசு எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளது, வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களைச் சந்தித்து ஒரு புகார் பெட்டி வைத்து அதில் மக்களுக்குஎன்ன பிரச்சனைஉள்ளது என்தைப் புகாராக எழுதிப் போட வேண்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சட்டமன்றத்தில் நானே ஒரு திட்டத்தை அறிவித்துள்ளேன். அதுதான், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம். இதன் மூலம், தமிழகத்தில் 9 லட்சத்து 77 ஆயிரத்து 638 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 5 லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து 812 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான விளக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edappadi palanisamy speech at ulunthurpet function

இப்படிப்பட்ட நிலையில், ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதற்கு இதுபோன்ற அறிவிப்பை செய்துள்ளார். ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் ஏமாற மாட்டார்கள். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இதேபோல் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்கிற ஒரு கூட்டத்தை நடத்தி, மக்களை அமர வைத்து அவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்றார்.அப்படி பெறப்பட்ட மனுக்கள் மீது அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த மனுக்கள் என்ன ஆனது என்று மக்கள் அவரிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் கேட்கவில்லை.

இப்போது மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று சொல்லி கூட்டத்தைக் கூட்டி மக்களிடம் கருத்துக் கேட்கிறார். ஏற்கனவே, மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வியை முன்வைக்கிறார்கள். ஒருமுறை மக்கள் ஏமாந்தார்கள். இனி ஏமாற மாட்டார்கள். 2019ஆம் ஆண்டு அவர் மக்களிடம் பெற்ற மனுக்களை அரசிடம் கொண்டுவந்து சேர்த்திருந்தால், அதைப் பரிசீலனை செய்து தீர்வு கண்டிருப்போம்.ஆனால், அதுவும் செய்யவில்லை. துணை முதலமைச்சர், உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் இருந்தபோது,என்ன செய்து கொண்டிருந்தார்.

இப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்ததா? 100 நாளில் பிரச்சினையைத் தீர்க்க போவதாகச் சொல்கிறார். ஆனால் முதலமைச்சர் சிறப்புத் திட்டத்தின் மூலம் மூன்று நாட்களில் மக்களின் குறைகளை இந்த அரசு தீர்த்து வைத்து வருகிறது. ஏற்கனவே, கோட்ட அளவில் உள்ள கோட்டாட்சியர்கள் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க மனுக்கள் பெற்றுதீர்வும் காணப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஸ்டாலின் மனுக்களை வாங்கி வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? நீங்கள் என்ன ஆட்சிக்கு வரப் போகிறீர்களா? அது ஒருபோதும் நடக்காது.

மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது தில்லுமுல்லு செய்து ஆசை வார்த்தைகளைக் கூறி, வெற்றி பெற்றுவிட்டீர்கள். வெற்றிபெற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு புதிய தொழில் வருவதற்குக் குரல் கொடுத்திருப்பீர்களா? தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மைகள் பெற்றுத் தந்தீர்களாஅல்லது மத்திய அரசிடமிருந்து அதிக அளவு நிதி பெற்று தருவீர்களா?ஒன்றுமே செய்யவில்லை. அதனால் தான் தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. 5 நாட்களுக்கு முன்பு தான் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி என்கிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார்.

சில நாட்களிலேயே 34 தொகுதிகளை அவர் இழந்துவிட்டார். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் திமுகவினர் சொல்கிறார்கள். நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டஅரசு திமுக தான். திமுக ஆட்சியில் தான் ஊழல் என்ற வார்த்தையே பிறந்தது. நீங்கள் எங்களைப் பற்றி பேசுகிறீர்கள். உலகமே வியக்கும் வகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தீர்கள். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது. திமுகவின் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன. இது பற்றி விவரங்கள் வெளிவந்ததால், தேர்தலில் பாதிக்கும் என்று கருதி இல்லாததை எல்லாம்ஸ்டாலின் எங்கள் மீது கூறி வருகிறார். எங்கள் மடியில் கனமில்லை வழியில் பயம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுகஒரு குடும்பக் கட்சி. கார்ப்பரேட் கம்பெனி மு.க.ஸ்டாலின் அதற்கு சேர்மன். உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் டைரக்டர்கள். சேர்மன் சொல்வதை டைரக்டர்கள் செய்வார்கள்.அப்படிப்பட்ட கட்சிதான் திமுக. அவரது குடும்பத்தைத் தவிர்த்து, யாரும் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிக்கு வர முடியாது. அப்படிப்பட்ட கட்சி நாட்டை ஆள வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆகவேதான் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள்" இவ்வாறுஎடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சிதம்பரம்பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்பி அருள்மொழித்தேவன் உள்பட அதிமுக பிரமுகர்களும்ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

admk edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe