Skip to main content

"அந்த திராணி உங்களுக்கு இல்லையே" - திமுகவை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

edappadi palanisamy slams dmk in election capaign

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் பணிகளை அதிகாரிகள், போலீஸார் நேர்மையாகச் செய்ய வேண்டும். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்படக் கூடாது. இந்த தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். அதற்கான நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம். தமிழ்நாட்டில் நேர்மையாகத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நேர்மையாகத் தேர்தலை நடத்தாவிட்டால் நாங்கள் நடத்த வைப்போம். 

 

பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தனது வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பைச் செய்யவில்லை. சம்பிரதாயத்திற்கு வெறும் 3 ரூபாயை மட்டும் பெட்ரோலுக்கு குறைத்து உள்ளனர். திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.

 

அதிமுகவை எதிர்கொள்ளும் திராணி திமுகவிற்கு இல்லை. இப்போது இருக்கும் திமுகவிற்கு அந்த பலம் இல்லை. தேர்தலை அறிவித்து விட்டோம். நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பது தானே முதலமைச்சருக்கு அழகு. நான் முதலமைச்சராக இருக்கும் போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அப்படித்தானே செய்தேன்.. நாங்கள் எதிர்க்கட்சியினரை, மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே. அந்த தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பங்களில் ஈடுபட திமுகவினர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேற்கு வங்காளத்தில் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் ஆளுநர் அங்கு சட்டசபையையே முடக்கி உள்ளார். அதே தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும். திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி. 4 ஆண்டுகள் மட்டுமல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க சொன்னதைச் செய்யப் போவதில்லை" எனக் கடுமையாகச் சாடினார். 

 

 

சார்ந்த செய்திகள்