
பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 21 பொருள்கள் கொடுக்கப்பட்டதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய இந்நிலையில் அதற்கான பதிலை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் 500 கோடி ரூபாய் ஊழல் என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். 2.15 கோடி அட்டைதாரர்களுக்குக் குறுகிய காலத்தில் 21 பொருட்கள் தரமாக வழங்க வேண்டும் என்பதற்காக உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டு குறைந்த விலை புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல இணைப்பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்களுடன் கூட்டத்தை நடத்தி அனைத்து பொருளும் தரமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தோம். முதலமைச்சரே சென்னையில் நியாயவிலை கடைகளில் பொருட்களின் தரத்தையும் விநியோகத்தையும் ஆய்வு செய்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு (2021 ஆம் ஆண்டு) வழங்கப்பட்ட 20 கிராம் முந்திரி பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த பொங்கலுக்கு திமுக ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் என 110 கிராம் பொருளுக்கு வெறும் 62 ரூபாய்தான் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட கிராம் எண்ணிக்கைவிட அதிகம், விலையும் குறைவு. திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பலரும் கலந்து கொண்டு அவர்கள் கொடுத்த விலை புள்ளி அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் அரசால் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துவிட்டு அபாண்டமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)