Advertisment

''வருவாய் அதிகம் கிடைத்தும் கடன் மட்டும் ஏன் குறையல?''-எடப்பாடி பழனிசாமி கேள்வி

Edappadi Palanisamy Question!

Advertisment

2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்றுநடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குபின்னர் கூட்டாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த பட்ஜெட் வெத்துவேட்டாகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு 55,781.17 கோடி ரூபாய் ஏற்பட்டிருக்கிறது. 2021-22 ஆண்டுக்கான கடன் 1,08,175 கோடி ரூபாய் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். எங்கள் ஆட்சி சமயத்தில் கரோனா சூழல் இருந்ததால் வருவாய் சுத்தமாக இல்லை. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கரோனா குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. பத்திரப்பதிவுத்துறை, பெட்ரோல் விற்பனை, டிரான்ஸ்போர்ட் இப்படி நிறைய வருவாய் கிடைத்தது. இப்படி வருவாய் அதிகம் கிடைத்தும் கடன் மட்டும் ஏன் குறையல. இதனால் இவர்கள் முறையாக செயல்படவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கல்விக் கடன் ரத்து என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது ஆனால் நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை கொடுப்போம் என்றார்கள் அதனையும் அறிவிக்கவில்லை. சாக்குப்போக்கு சொல்லி இதையெல்லாம் தள்ளிப் போட்டுள்ளார்கள். சிமெண்ட் விலை அதிகரிச்சுக்கிட்டே போகுது கட்டுப்படுத்த தவறிட்டாங்க.

Advertisment

கடந்த ஆண்டு பெட்ரோலுக்கு மட்டும் 3 ருபாய் குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால் திமுக அரசு குறைக்கவில்லை. உர விலை ஏறிவிட்டது. அதற்காக மத்திய அரசிடம் சரியாக பேசி நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. சிமெண்ட் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள். கம்பி, ஜல்லி, எம்சாண்ட், மணல், செங்கல் எல்லாமே விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கட்டுமானப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும். விலை ஏறும்போது அதனை கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். செய்யவில்லை. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் கட்டுமானப் பொருட்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. படித்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள். 6 மாதம் அகவிலைப்படியை பிடித்தம் செய்திருக்கிறார்கள். 2021 ஜூலை முதல் டிசம்பர் வரையும் வழங்கப்படவில்லை.

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்கவும், வருவாயை பெருக்கவும் ஆலோசனை குழு அமைக்கப்பட்ட ரகுராம்ராஜன் குழு என்ன திட்டங்களை முன்வைத்தது என்பது பற்றி எந்த குறிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் இந்த விடியா அரசின் நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்ப்பந்தல். இதனை வாய்வாடகைத்தாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்துக்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறைக்கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தில்லுமுல்லு செய்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னையை பொறுத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 பேர். ஆனால் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 5 முதல் 6 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதேபோல கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 157 பேர் தான். ஆனால் கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 85 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் தேர்தலை ஒத்தி வைத்துள்ளனர்'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe