ADVERTISEMENT

“சசிகலா அ.தி.மு.க.வில் இணைய 100% வாய்ப்பே இல்லை..” - முதல்வர் பழனிசாமி அதிரடி

01:17 PM Jan 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக நேற்று (18/01/2021) காலை 11.55 மணிக்கு டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (19 ஜன.) காலை பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ADVERTISEMENT

மோடியை சந்தித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன். அதேபோல் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் அதனை ஏற்றுகொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கோதாவரி காவிரி இணைப்புத் திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் அதிகம் பயன் பெறும் காவிரி குண்டாறு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை தூய்மை செய்யும் திட்டம் ஆகிய இரண்டிற்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஜனவரி மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு 99.60 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டின் பல முக்கிய திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரம் பெறுவதற்குத் தகுந்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு, சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாடங்களை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதனை விரைந்து செயல்படுத்துமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளேன்.

எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 12 மீனவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மீன்வள உள்கட்டமைப்பு நிதியில் மீன்பிடி துறைமுகங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன். மேலும் துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன். இவற்றை எல்லாம் பிரதமர் மோடி பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்தும் அரசியல் ரீதியாகவும் ஏதும் ஆலோசித்தார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “நான் வந்தது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வைத்த நீண்டகால கோரிக்கைகளுக்காகவும். அரசியல் எதுவும் பேசவும் இல்லை, அது பேச உகந்த நேரம் இதுவுமில்லை” எனத் தெரிவித்தார்.

சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “100 சதவீதம் வாய்ப்பே இல்லை, அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவருடன் இருந்த பல பேர், அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். சிலர் மட்டும்தான் அவருடன் இருக்கிறார்கள். ஜெயலலிதாவே அவரை பல ஆண்டுகளாக நீக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகுதான் அவருக்குப் பதவியே வழங்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT